ஒல்லாந்தரின் யாழ்ப்பாணக் கோட்டை | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை
Description
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆண்டபோது பண்ணைப் பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டியிருந்தனர். இது நான்கு மூலைகளிலும் கொத்தளங்களைக் கொண்ட நாற்பக்க வடிவம் கொண்டது. இதன் சுவர்களும் பலம் வாய்ந்தவையாக இருந்தன. சுவருக்கு வெளியே கோட்டையைச் சுற்றி நீரில்லாத அகழி இருந்தது. இது, கிழக்கத்திய நாடுகளில் ஒல்லாந்தரின் தலைமையிடமாக விளங்கிய பத்தேவியாவில் (இன்றைய ஜக்கார்த்தா) இருந்த கோட்டையை விடப் பெரியது என பல்டேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். எனினும், அக்காலத்தில், நவீனமாக இருந்த போர் உத்திகளுக்கும், ஆயுதங்களுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய வகையில் கோட்டையின் வடிவமைப்பும், அதன் சுற்றாடலும் இருக்கவில்லை. இந்த நிலைமை குறித்து ஒல்லாந்தர் ஆட்சியின் தொடக்க காலக் கட்டளைத் தளபதிகள் தமது அறிக்கைகளில் குறிப்பிட்டிருப்பதுடன், கோட்டையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளனர். குறிப்பாகக், கோட்டை மதில்களுக்கு மிக அண்மையில் இருந்த வீடுகளையும், பிற கட்டிடங்களையும் அகற்றியமை, அகழிக்குள் கடல் நீரை நிரப்புவதற்கு முயற்சி செய்தமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். உள்ளூர் எதிரிகளைப் பொறுத்தவரை இக்கோட்டை போதுமானதாக இருந்தபோதும், இந்து சமுத்திரப் பகுதியில் அதிகாரப் போட்டியில் இறங்கியிருந்த ஐரோப்பிய எதிரிகளின் தாக்குதல்களுக்குக் கோட்டை ஈடுகொடுக்காது என்பதை ஒல்லாந்தர் அறிந்தேயிருந்தனர். இதனால், யாழ்ப்பாணக் கோட்டையை அக்காலப் போர்த் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கத்தக்க ஒரு கோட்டையாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது.